Tuesday, 29 May 2012

இல்லறமும் நல்லறமும்

இல்லறமும் நல்லறமும் - பசும்பொன் தேவரின் சீரிய சிந்தனைகள்

ஆண்மையில் பெண்மையும் பெண்மையில் ஆண்மையும் கொண்டது தான் மனிதப் பிறவி. ஒன்றையொன்று விலக்கிக் கொண்டதோ ஒன்றையொன்று தழுவாமல் தனிப்பட்டதோ அல்ல ஆண்மையும் பெண்மையும். இதற்கு அடையாளம் தான் அர்த்தநாரீஸ்வரர்.

ஆண்களுக்கு இடப்பக்கம் பெண் வடிவமாகவும், பெண்களுக்கு இடப்பக்கம் ஆண் வடிவமாகவும் அமைந்திருக்கிறது என்பது சாத்திரம். இவ்விரண்டில் விரும்பியவர்கள் விரும்பிய பக்தியை ஏற்று அனுசரிக்கலாம். அதாவது இல்லறத்தை விரும்புகிறவர்கள் அதை அனுசரிக்கலாம்.

துறவறத்தை விரும்புகிறவர்கள் அதைச் சாரலாம். ஆக இரண்டு அறங்களும் தரம் ஒன்றேயன்றி இரண்டல்ல. ஏற்றத்தாழ்வுமல்ல. இல்லறத்தை அனுபவிக்கிறவர்களுக்கு அவர்களுக்குரிய பலனை கொடுப்பதற்காக ஆண் - பெண் இணைப்பு மூலம் புத்திரன் என்ற பெயரால் அவர்களுடைய காலம் நிறைவேற்றப்படுகிறது.




இதே போல் துறவறம் பூனுகிறவர்களுக்கு இந்த பாசம் இடகலை - பிங்கலை என்ற நாடிகள் சூரியநாடி சந்திரநாடிகள் என்ற பேதத்தின் மூலம் சீடன் என்ற பெயரால் ஒரு புத்திரன் கிடைக்கிறது. அதன்மூலம் துறவிகளின் காலம் வளர்கிறது.




இல்லறத்திலும் துறவறத்திலும் சிறிது பெரிது பார்ப்பது பேதமை.  இரண்டும் ஒரே நிறையையும் தகுதியையும் கொண்டது தான். இதில் பெரிது சிறிது பேசுகிறவர்கள் இரண்டும் விளங்காத நபர்களாகத் தான் இருக்க முடியும்.

இல்லறம் இல்லையேல் உத்தமர்கள் பிறக்க வழியில்லை. துறவறம் இல்லையேல் மனநெறியை சாதிக்கும் மகாயோகிகள் தோன்ற வழியில்லை.

ஆகவே இல்லறமும், துறவறமும் வெவ்வேறல்ல. அது அவரவர் மனப்போக்கிற்க்கும் பிராணத்துவ தர்மத்திற்கும் தக்கவாறு உண்டாக்கப்பட்ட காரியமாகும்.

பசும்பொன் தேவரின் சீரிய சிந்தனைகள் பக்கம்-92