Showing posts with label தெய்வீகம் - ஆன்மீகம். Show all posts
Showing posts with label தெய்வீகம் - ஆன்மீகம். Show all posts

Tuesday, 29 May 2012

இல்லறமும் நல்லறமும்

இல்லறமும் நல்லறமும் - பசும்பொன் தேவரின் சீரிய சிந்தனைகள்

ஆண்மையில் பெண்மையும் பெண்மையில் ஆண்மையும் கொண்டது தான் மனிதப் பிறவி. ஒன்றையொன்று விலக்கிக் கொண்டதோ ஒன்றையொன்று தழுவாமல் தனிப்பட்டதோ அல்ல ஆண்மையும் பெண்மையும். இதற்கு அடையாளம் தான் அர்த்தநாரீஸ்வரர்.

ஆண்களுக்கு இடப்பக்கம் பெண் வடிவமாகவும், பெண்களுக்கு இடப்பக்கம் ஆண் வடிவமாகவும் அமைந்திருக்கிறது என்பது சாத்திரம். இவ்விரண்டில் விரும்பியவர்கள் விரும்பிய பக்தியை ஏற்று அனுசரிக்கலாம். அதாவது இல்லறத்தை விரும்புகிறவர்கள் அதை அனுசரிக்கலாம்.

துறவறத்தை விரும்புகிறவர்கள் அதைச் சாரலாம். ஆக இரண்டு அறங்களும் தரம் ஒன்றேயன்றி இரண்டல்ல. ஏற்றத்தாழ்வுமல்ல. இல்லறத்தை அனுபவிக்கிறவர்களுக்கு அவர்களுக்குரிய பலனை கொடுப்பதற்காக ஆண் - பெண் இணைப்பு மூலம் புத்திரன் என்ற பெயரால் அவர்களுடைய காலம் நிறைவேற்றப்படுகிறது.




இதே போல் துறவறம் பூனுகிறவர்களுக்கு இந்த பாசம் இடகலை - பிங்கலை என்ற நாடிகள் சூரியநாடி சந்திரநாடிகள் என்ற பேதத்தின் மூலம் சீடன் என்ற பெயரால் ஒரு புத்திரன் கிடைக்கிறது. அதன்மூலம் துறவிகளின் காலம் வளர்கிறது.




இல்லறத்திலும் துறவறத்திலும் சிறிது பெரிது பார்ப்பது பேதமை.  இரண்டும் ஒரே நிறையையும் தகுதியையும் கொண்டது தான். இதில் பெரிது சிறிது பேசுகிறவர்கள் இரண்டும் விளங்காத நபர்களாகத் தான் இருக்க முடியும்.

இல்லறம் இல்லையேல் உத்தமர்கள் பிறக்க வழியில்லை. துறவறம் இல்லையேல் மனநெறியை சாதிக்கும் மகாயோகிகள் தோன்ற வழியில்லை.

ஆகவே இல்லறமும், துறவறமும் வெவ்வேறல்ல. அது அவரவர் மனப்போக்கிற்க்கும் பிராணத்துவ தர்மத்திற்கும் தக்கவாறு உண்டாக்கப்பட்ட காரியமாகும்.

பசும்பொன் தேவரின் சீரிய சிந்தனைகள் பக்கம்-92

Saturday, 8 October 2011

வள்ளலாரின் கொள்கைகளில் பிடிப்பு கொண்ட பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெருமகனார்.



பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெருமான் அவர்கள், வள்ளலார் பெருமானிடம் மிகுந்த அன்பு கொண்டிருந்தார்கள். வள்ளலார் பெருமானின் திரு அருட்பாவில் தோய்ந்திருந்தார்கள்.

தைப்பூசந் தோறும், வடலூரில் தேவர் பெருமகனாரின் சொற்பொழிவு நடைபெறும். அவரது சொற்பொழிவினைக் கேட்பதற்கென மக்கள் வெள்ளம் அலை கடலெனத் திரண்டு வந்தது.

வள்ளல் பெருமான் முத்தேக சித்தி அடைந்த உண்மையினை சரிவரப் புரிந்து கொள்ளாத சிலர், பெருமானின் மறைவில், பலவிதமான சந்தேகங்களை எழுப்பி, பொது மக்களை மிகவும் குழப்பி வந்தனர்.

ஆனால், தேவர் திருமகனாரோ, பெருமான் போன்ற ஞானிகள் அடைந்த நிலை எத்தகையது, என்பதை கடந்த 1949ஆம் ஆண்டு ஜூன் மாதம் 13ம் நாள் மதுரை வெள்ளியம்பல மண்டபத்தில் நடைபெற்ற தமிழ்நாடு சன்மார்க்கத் தொண்டர் மகாநாட்டில் பேருரை நிகழ்த்தி, வள்ளல் பெருமான் அடைந்த உண்மை நிலையினை அனைவரும் அறியச் செய்தார்.

தேவர் திருமகனாரின் அந்தப் பேருரை “அருள் மறை தந்த வள்ளலார்” என்ற தலைப்பில் புத்தகமாக, (ரூ.10) கடந்த 2008 டிசம்பர் மாதம் மதுரையில் நடைபெற்ற மதுரை மாவட்ட சன்மார்க்க சங்கங்களின் கூட்டமைப்பு விழாவின் போது வெளியிடப்பட்டது. ஆன்மீகத்தில் தேவர் பெருமகனார் எந்த அளவிற்கு உயர்ந்த நிலையில் இருந்தவர் என்பதற்கு,. இந்தப் பேருரை ஒரு சான்றாகும்.

சன்மார்க்க அன்பர்கள் அனைவரின் வீடுகளிலும் சன்மார்க்க சங்கங்களிலும் இருக்க வேண்டிய ஒரு அருமையான நூல் இதுவாகும்.

மதுரை மாவட்டச் சன்மார்க்க சங்கத் தலைவர் திரு T.R. ஜவஹர்லால் அவர்கள், இந்தப் புத்தகத்தை வெளியிடுவதற்கெனப் பெருமுயற்சி எடுத்துக் கொண்டார்.

அந்தப் புத்தகத்தின் முன், பின் அட்டைப் படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.






அத்துடன், முதுகுளத்தூர் பேருந்து நிலையத்தில், தேவர் திருமகனாரின் உருவச் சிலை எழுப்பப்பட்டு, கம்பீரமாகக் காட்சி அளிக்கிறது.


அவரைப் பற்றி, தலைவர்கள் பலரின் கருத்துக்கள் முதுகுளத்தூர் தாலுகா அலுவலகம் அருகில் உள்ள தேவர் மண்டபத்தின் சுவற்றில் அனைவரும் அறியும் வண்ணம் எழுதி வைக்கப்பட்டுள்ளது.



Ref: http://www.vallalarspace.com/UnisoulUniverse/Articles/2795

Friday, 26 August 2011

ஏன் இத்தனை தெய்வங்கள் நம்மிடம் - பசும்பொன் தேவர் திருமகனார் விளக்கம்

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்கள் 21.2.1957, காஞ்சிபுரத்தில் ஆற்றிய உரையிலிருந்து:

’ஒன்றே குலம் ஒருவனே தேவன்‘ என்றுதானே கூறியிருக்கிறார்கள் அப்படியிருக்கும் போது பல தெய்வங்கள் இருப்பானேன்? என்று கேள்வி எழுப்புகிறார்கள். ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்பது யார் சொன்ன வார்த்தை? அது அநேக மக்களுக்கு தெரியாது. சரியாகப் புரியாதவர்கள், நாஸ்திகர் பேசினார் என்று சொல்வார்கள். இந்த வாக்கு திருமூலர் வேதவாக்கு. அவர் சந்தேகத்திற்கு இடம் இல்லாமல் கூறியிருக்கிறார். அவர் கூறியிருப்பதை முழுவதும் கூறாமல்,’ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்பதை மாத்திரம் சொல்லிவிட்டு விடுகிறார்கள் நாஸ்திக கும்பல்.

அப்படியானால் ஒரு வக்கீல் ஒரு 'statement'ன் ஒரு பகுதியை மாத்திரம் வாசித்துக் காட்டிவிட்டு, இன்னொரு பகுதி வேண்டாம் என்று கூறினால், அடி முட்டாளாக இருந்தால்தான் அதை கேட்பான். இல்லாவிட்டால் எடுத்துக் கொண்ட பகுதியைப் பூராவும் படி என்று சொல்லுவான். அதுதான் முறை.

பல தெய்வ உருவங்களை வைத்து வணங்குகிற மக்களுக்கு, ஒரு தெய்வம் தான் உண்டு என்று சொல்வதற்கு என்ன காரணம்? என்று சாதாரண மக்களுக்கு தெரியாது.

ஒருவர் வீட்டுக்கு போகிறோம். அந்த வீட்டில் பல படங்கள் மாட்டப்பட்டிருக்கின்றன. அந்த வீட்டுக்காரர் வந்து, இதுதான் என்னுடைய தகப்பனார் படம் என்று ஒரு படத்தைக் காட்டுகிறார். அதற்கு பின்னால் ஒரு பெண்ணோடு இருப்பவர் படத்தைக் காட்டி, இதுவும் என் தகப்பனார் படம் என்கிறார். அதற்குப் பின்னால் ஆணும், பெண்ணும், ஒரு குழந்தையுடன் இருக்கிற படத்தைக் காட்டி இதுவும் என் தகப்பனார் படம் என்கிறார். அதற்குப் பின்னர் விருத்தாப்பியப் பருவத்தில் ஒருவரும், கல்யாண கோலத்தில் இருக்கிற ஒரு ஆணும், பெண்ணும் இருக்கிற படத்தைக் காட்டி இதுவும் என் தகப்பனார் படம் என்கிறார். அதற்குப் பின்னால் ஒரு குழந்தையைக் கொஞ்சிக் கொண்டிருக்கிற படத்தைக் காட்டி இதுவும் என் தகப்பனார் படம் என்கிறார். இவ்வளவையும் பார்த்துக் கொண்டு வருகிறவர் உனக்கு எத்தனை தகப்பனார் என்று கேட்கலாமா? (கைதட்டல்). அப்படிக் கேட்பவன் அறிவுடையவன் ஆவானா?

முதல் படம் இவன் தகப்பனார் வாலிபனாக இருந்தபோது எடுத்த படம். அடுத்த படம், இவனுடைய தாயை, தகப்பனார் கல்யாணம் செய்து கொண்ட போது எடுத்த படம்.

அடுத்தது, இவன் குழந்தையாகப் பிறந்த போது எடுத்த படம்.

அடுத்து இவனை மண அறையில் மனைவியோடு தகப்பனார் ஆசீர்வாதம் செய்கிற படம்.

அடுத்தது இவன் பெற்ற குழந்தையைத் தகப்பனார் கொஞ்சுகிற படம். ஒரே தகப்பனார் பல காலத்தில் பல உருவில் இருக்கிறார்.

அதே போல் பரம்பொருள் ஒரே பிரம்மம், உல்கத்திலே துஷ்ட நிக்ரக பரிபாலனம் செய்ய பல ரூபத்தோடு பல காட்சிகளை எடுக்கிறார். இதை ஞாபகார்த்தம் செய்ய வேண்டுமென்பதற்காக, அந்தத்தத் திருக்கோலங்களாக - உருவங்களாக வைத்திருக்கிறார்கள். அத்தனை தெய்வம் இருக்கிறது என்று சொல்லவில்லை. இதுதான் ரகசியம். இதைச் சாதாரண அறிவற்ற நிலையில் “இத்தனை தெய்வங்களா ?” என்று கேட்பது நாலாம்தரக் கேள்வி…”

மூலம்: பசும்பொன் களஞ்சியம்